நாட்டில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதப்படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியை வைத்து அரசியல் நடத்தக் கூடாது என்பதே தனது கொள்கை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை பெண் வேட்பாளர் லதா கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை பெண் வேட்பாளர் லதா கோடீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அத்துடன் முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பான தகவல்களை வெளியிட்டதற்காக கடந்த காலங்களில் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்த லதா கோடீஸ்வரன் எதிர்வரும் காலங்களில் அது தொடர்பில் கருத்து வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள அரசியல் கட்சிகளின் முன்னுக்குப் பின் முரண்பட்ட கருத்துகள் காரணமாகவே தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்ததாகவும் லதா கோடீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.