கனடா தொடர்ந்தும் ஈழத் தமிழர்களின் நீதிக்காக தொடர்தும் குரல் கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெனிவா அமர்வில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உறுதி அளித்துள்ளமையை தான் நன்றிகளுடன் வரவேற்பதாகவும் அனந்தி சசிதரன் குறிப்பிட்டள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையால் இலங்கை குறித்து எடுக்கப்படும் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசிற்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்துள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை அரச படைகளால் தமிழ் மக்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி தொடர்ந்தும் தாமதப்படுத்தப்பட்டு வருவதற்கு, இக் குற்றத்துடன் நேரடியாகத் தொடர்புடைய இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறலை நிறைவேற்றாமல் உள்ளமையே காரணம் எனவும் அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரிற்கு பின்னர் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்குவோம் என்று முன்னைய இலங்கை ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில் போரிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகள் தமது ஆதரவினை வழங்கியிருந்ததாக தெரிவித்துள்ள அனந்தி சசிதரன்
ஆனால், அதன் பின்னர் நடைபெற்ற, நடைபெற்று வரும் இனப்படுகொலைக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை செய்வதற்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்காது மௌனமாக இருப்பதானது பாதிக்கப்பட்ட தமிழர்களிடையே பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.