நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை தோற்கடித்து வெள்ளையடிப்பு செய்யவே விரும்புவதாக தென் ஆபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார்.
நேற்று (19.01.2018) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே ரபாடா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வேகப்பந்து வீச்சில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே எமது நோக்கம்.
அதேபோன்று இறுதி டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று இந்திய அணியை வைட் வோஷ் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம்.
இந்திய அணியை பொறுத்த வரையில் துடுப்பாட்டத்திற்கு அணித்தலைவர் விராட் கோஹ்லியையே நம்பி உள்ளது.
அதேபோன்று நாமும் சில வீரர்களையே நம்பி உள்ளோம்.
இந்திய அணியில் தரமான வீரர்கள் இல்லை என்று கூற முடியாது.
அதேவேளை விராட் கோஹ்லி அதிக ஓட்டங்களை குவிக்கிறார் என்பதை மறுக்க முடியாது. கோஹ்லி தற்போது உலகின் சிறந்த வீரர் விருதுக்கு தெரிவாகியுள்ளார்.
எனவே சிறந்த வீரருக்கு எதிராக பொறுப்புணர்வோடு பந்து வீசுவது அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தென் ஆபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி ஜோகன்னஸ்பேர்க்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.