இந்தியாவில் ஹரியானாவில் பாடசாலை தலைமை ஆசிரியையை 12ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் யமுனாநகரில் உள்ள விவேகானந்தா என்ற தனியார் பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவனே இவ்வாறு சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைக்கு குறைவான வருகை காரணமாக பாடசாலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்று பாடசாலைக்கு சென்ற மாணவன், தலைமை ஆசிரியையான ரிது சப்ராவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 3 குண்டுகள் பாய்ந்ததால், இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த ஆசிரியை மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தலைமை ஆசிரியை ரிது சப்ராவை சுட்டுக்கொன்ற மாணவனை அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பிடித்து பொலீசில் ஒப்படைத்துள்ளனர்.
பொலீசார் மேற்கொண்ட விசாரணையில், தலைமை ஆசிரியை சுட்டுக்கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கி தனது தந்தையுடையது என மாணவன் தெரிவித்துள்ளான். இதையடுத்து, அவனிடம் பொலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.