ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவால் பதுளை மாவட்ட பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மற்றும் காவல்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய பாரபட்சமின்றி விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் விசாரணைகள் நிறைவடையும் வரை ஊவா மாகாண கல்வி நடவடிக்கைகளை ஊவா மாகாண ஆளுநரின் கீழ் கொண்டுவருமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாபதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஊவா மகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தமது அதிகாரத்தின் கீழ் இருந்த கல்வி அமைச்சு பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிட வைத்தமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடையும்வரை தாம் அந்த பதவியில் இருந்து விலகுவதாக சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
பதவி விலகல் தொடர்பான கடிதத்தை ஆளுனரிடம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாடசாலை அதிபரை, ஊவா மாகாண முதலமைச்சர் மண்டியிட வைத்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபர் பதுளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.