சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என தே.மு.தி.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசும்போது மேடையை நோக்கி கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு தொழிலை பாதுகாக்கக்கோரி சிவகாசியில் இன்று தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா கலந்து கொண்டு உரையாற்றியுள்ளனர்.
பிரேமலதா பேசியதாவது:-
விருதுநகர் என்றாலே நினைவுக்கு வருவது பெருந்தலைவர் காமராஜரும், சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளும்தான். இன்று பெருந்தலைவர் காமராஜர் காட்டிய வழியில் நமது கேப்டன் செயல்படுகிறார். அவரது ரோல் மாடல் பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர்.
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் இன்று பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழவழியின்றி தவிக்கிறார்கள். பட்டாசு தொழிலின் உபதொழிலும் முடங்கிபோய் உள்ளன. தொழிற்சாலைகளை முன்னேற்ற வேண்டியது தான் ஆளும் கட்சியின் கடமை. ஆனால் அவர்கள் எதையும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.
தற்போது தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் கொந்தளிப்பாக உள்ளனர். பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி தே.மு.தி.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். அதை விஜயகாந்த் அறிவிப்பார் எனவும் பிரேமலதா தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவிக்கையில்
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பட்டாசு தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வை பாதுகாக்கும் வகையில் பட்டாசு தொழிலாளர் நலவாரியம் அமைக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி சீன பட்டாசை இறக்குமதி செய்தால் சிவகாசியில் பட்டாசு தொழில் பெரும் பாதிப்பை சந்திக்கும்.
சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என கூறி வருங்காலத்தில் போகி பண்டிகையைகூட நிறுத்தி விடுவார்கள். தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வு அனைவரையும் பாதித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போதே மேடையை நோக்கி கற்கள் வீசப்பட்டன. கற்களை வீசியது யார்? என்று தெரியவில்லை. போலீஸ் பாதுகாப்பையும் மீறி கற்கள் வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.