சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டின் இடையே அந்நாட்டின் ஜனாதிபதியுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இன்று 48-வது உலக பொருளாதார மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
குறித்த மாநாடு எதிர்வரும் 26-ம் திகதி வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இம் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சுவிட்சர்லாந்தை சென்றடைந்துள்ளார்.
அத்துடன் மத்திய அமைச்சர்களான சுரேஸ்பிரபு, பியூஸ்கோயல், தர்மேந்திரபிரதான், மற்றும் முகேஸ் அம்பானி, ஆசிம்பிரேம்ஜி, ராகுல்பஜாஜ் உள்ளிட்ட தொழில் அதிபர்களும் குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்தை சென்றடைந்துள்ளனர்.
சுவிட்சர்லாந்திற்கு சென்றுள்ள மோடியை அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் நேரில் சென்று வரவேற்றார்.
இன்று மாநாட்டின் இடையே சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டை இந்திய பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சுவிட்சர்லாந்து ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவுகள் குறித்து மதிப்பாய்வு செய்ததுடன், அதனை மேலும் பலப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்திலேயே பிரதமர் மோடி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அத்துடன் மாநாட்டில் பங்கேற்க வந்திருந்துள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளையும் அழைத்து வட்டமேசை மாநாடு நடத்தியுள்ளதாகவும் மோடி மேலும் தெரிவித்துள்ளார்.