U-19 உலகக்கிண்ண காலிறுதி போட்டியில், கென்யாவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
U-19 உலகக்கிண்ணம் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. நடைபெற்ற காலிறுதி போட்டியில் இலங்கை – கென்யா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக தனஞ்ஜெய லக்ஷனும், ஹஷிதா பயகோதாவும் களமிறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 87 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் தனஞ்ஜெய லக்ஷன் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், பயகோதாவுடன் ஜோடி சேர்ந்த நிஷான் மதுஷான் பொறுப்பாக விளையாடினார்.
தொடக்கத்தில் இருந்து பொறுமையாக விளையாடிய பயகோதா தனது அதிரடியை காட்டினார். 152 பந்துகளில் 2 சிக்சர்கள், 28 பவுண்டரிகள் அடித்து 191 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் களம் இறங்கிய கமிந்து மெண்டிஸ் 21 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரிகள் அடித்து 53 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 419 ஓட்டங்கள் எடுத்தது.
கென்யா தரப்பில் அபிஷேக் சிதம்பரன் 2 விக்கெட்டும், தேசய், வேர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, கென்யா அணி 420 என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கியது.
ஆனால், இலங்கை அணியின் துல்லிய பந்து வீச்சில் கென்யா அணி 35.5 ஓவர்களில் 108 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து 311 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் ஹரின் புதியா 4 விக்கெட்டும், நிபுன் மலிங்கா 2 விக்கெட்டும், ராஷ்மிகா, டேனியல், ஜெயவிக்ரமா, பண்டாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
U-19 கிரிக்கெட்டில் தனி நபர் ஒருவரின் அதிகபட்சமாக 191 ஓட்டங்கள் அடித்து சாதனை படைத்த பயகோதாவுக்கு சக வீரர்களும், முன்னாள் வீரர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்