யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் கடற்படையினரின் கவச வாகனம் மோதி, ஒன்பது வயது பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கடற்படையின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய கடற்படை முகாம்களுக்கு உணவு பொருட்களை விநியோகிக்க பயன்படுத்தப்படும் கவச வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து அங்கு பொதுமக்கள் ஒன்றுதிரண்டுள்ளதோடு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஏற்கனவே இப்பகுதியில் கவசவாகனம் வேகமாக பயணிப்பதாகவும், குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள காலை மற்றும் பகல் வேளைகளில் இவ்வாறு வேகமாக பயணிப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் முறையிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
4200 மக்கள் வசிக்கும் புங்குடுதீவில் ஆறு கடற்படை தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதோடு அவற்றை அங்கிருந்து அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அத்தோடு, யுத்தம் முடிவடைந்த 8 வருடங்கள் கடந்த பின்னரும் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் என்னவென்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.