அதிபரை மண்டியிட வைத்த சம்பவம் தொடர்பாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றி துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில் இச்சம்பம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றன.
குறித்த விசாரணைகளின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்ட விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும், அதிபரை மண்டியிட வைத்த சம்பவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ள வடிவேல் சுரேஸ், இந்தவிடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எனது பதவியையும் துறந்துவிட்டு ஆசியர்களுடன் இணைந்து கொள்வேன்
அதேபோன்று, மலையகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவிகளை துறந்துவிடுவோம் எனவும் மேலும் கூறியுள்ளார்.
குறித்த விசாரணைகள் இடம்பெற்றபோது பாதிக்கப்பட்ட தமிழ் அதிபர் ஒரு கட்டத்தில் “முதலமைச்சருக்கு தெளிவுபடுத்தினேன், எனினும் அவர் கேட்கவில்லை.
அவர் காலில் விழுந்த நொடி செத்துவிடலாம் போன்ற உணர்விலேயே இருந்தேன்” எனக் கூறி கதறி அழுதுள்ளார்.
அவரின் இந்த அழுகையினைத் தாங்கிக்கொள்ள முடியாத அமைச்சர் திகாம்பரம் நாடாளுமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றபோது அங்கிருந்து கண்ணீர் விட்டவாறு வெளியேறியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.