நாட்டில் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் மூலமாகவே காணாமல் போனோருக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணைகள் நடைபெறுவதற்கு குறித்த சட்டத்தில் இடமிருப்பதாக தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் இதில் செஞ்சிலுவை சங்கமும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், காணாமல் போனோர் விடயத்திலும், சிறையில் உள்ளவர்களை விடவிப்பது தொடர்பிலும் அரசாங்கத்திற்கு பல அழுத்தங்கள் இருப்பதாக எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல் போனோர் விடயத்தில் ‘இராணுவத்திடம் தமது உறவுகளை கையளித்தோம்.’ என்று வடக்கில் உள்ளவர்கள் கூறும் போது, ‘இராணுவத்திற்கு தண்டனை வாங்கி கொடுக்கப்போகின்றார்கள்’ என்ற கருத்து தெற்கில் எழுவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.
மேலும், அண்மையில் தான் படித்த செய்தி ஒன்றையும் இதன்போது சுமந்திரன் நினைவுபடுத்தியுள்ளார்.
அதில் ‘இறுதி யுத்தத்தில் தனது மகளை விடுதலைப்புலிகள் கொண்டு போய்விட்டார்கள்.’ என அந்த தாய் குறிப்பிட்டுள்ளார்.
அந்த தாயே தனது மகளை விடுதலைப்புலிகள்தான் கொண்டு சென்றார்கள் என கூறுகின்றார்.
ஆகவே விடுதலைப்புலிகள் கொண்டு சென்றவர்களில் அனைவருமே உயிருடன் வரவில்லை. ஆகவே காணாமல் போனவர்கள் விடயத்தில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.
இராணுவத்தினர் கொண்டு சென்றவர்கள் மட்டுமல்லாது வேறு விதத்திலும் காணாமல் போனவர்களின் விபரங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.