முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் அரசாங்கத்தின் நேரடி பொறுப்பிற்கு வந்த பின்னரே வறுமை நிலையிலிருந்து மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையில் 116ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
இதில் உரையாற்றும் போதே து.ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘2009ஆம் ஆண்டுக்கு முன்னர் மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களே வறுமையான மாவட்டங்களில் முதன்மையாக விளங்கின. முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் பலத்த பொருளாதார நெருக்கடிக்குள் இருந்த காலத்தில்கூட தற்போது எதிர்நோக்கும் வறுமைநிலையை எதிர்நோக்கவில்லை.
அத்துடன் முல்லைத்தீவில் தமிழ் மக்கள் காணிகளில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், தமிழ் மக்களுக்கு ஒரு வகையிலும், சிங்கள மக்களுக்கு மற்றொரு வகையிலும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் து.ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலை தொடர்ந்தும் நீடித்தால் நீண்டகால அடிப்படையில் முல்லைத்தீவில் தமிழின இருப்பு குழப்பப்பட்டு, சிங்கள மக்களை பெரும்பான்மை மக்களாக கொள்ளும் மாவட்டமாக முல்லைத்தீவு உருமாறும் நிலைக்கு தள்ளப்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்’ என்றார்.