பொதுமக்களின் காணிகளை சுவீகரித்துள்ள கடற்படையினரை வெளியேறுமாறு வலியுறுத்தி, தீவகம் ஊர்காவற்றுறை பருத்தியடைப்பில் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பினை நிறுத்தக் கோரி கிராம சேவையாளரிடம் மகஜர் ஒன்றும்; கையளிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியை அண்டிய பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக காணியின் உரிமையாளர் ஒருவருக்கு கடற்படையினர் காணி திணைக்களத்தினூடாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்தே காணி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, ‘வேண்டாம் வேண்டாம் காணி சுவீகரிப்பு வேண்டாம்’, ‘
எம்மை சொந்த இடத்தில் இருக்கவிடு’, ‘
நாங்கள் எங்கள் நிலத்தில் வாழவேண்டும்’
ஆகிய பதாதைகளைத் தாக்கியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடற்படையினர் தற்போது நிலைகொண்டுள்ள இரண்டு பரப்பு காணியுடன் 25 குடும்பங்கள் வாழ்ந்துவந்த 3 ஏக்கர் காணி கடற்படையின் முகாமைச்சுற்றி காணப்படும் நிலையில் குறித்த காணியில் மக்கள் குடியிருக்க முடியாத நிலையில் அச்சமாக உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, கடற்படையினர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமது சொந்த காணிகளில் முகாம்களை அமைத்து நிலைக்கொண்டுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.