அமெரிக்காவில் ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான 156 பெண்கள் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளது அமெரிக்காவையே உலுக்கியுள்ளது.
இந்த வழக்கில், குற்றவாளி லாரி நாசருக்கு 175 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவராக இருந்தவர் லாரி நாசர். இவர் ஜிம்னாஸ்டிக் மாணவிகளுக்கு சிகிச்சை என்ற பெயரில் பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக,
இவர் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இதுதொடர்பான வழக்கு விசாரணை, மிச்சிகனில் உள்ள Ingham County circuit நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
7 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகதான் லாரி மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் லாரியால் பாதிக்கப்பட்ட 156 பெண்கள்
நீதிபதி ரோஸ்மரி முன்னிலையில் சாட்சி கூறியுள்ளனர்.
இப்பெண்கள், அனைவரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை நீதிபதி முன்பாக அழுத்தமாக பதிவு செய்தனர்.
இவர்கள் அளித்த வாக்குமூலம் நீதிமன்றத்தில் இருந்தவர்களை கண்கலங்க வைத்தது.
தங்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தாலும், அதனை வெளி உலகத்திற்கு அடையாளப்படுத்தி கொள்ள விரும்பவில்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க அணியில் முக்கிய வீராங்கனையான மரோனே கூறியதாவது, என் வாழ்க்கையில் இருண்ட நாள் அது.
எனக்கு அப்போது 15 வயது. போட்டியில் பங்குபெற டோக்கியோவுக்கு விமானத்தில் சென்றேன். எங்களுடன் மருத்துவர் லாரியும் வந்திருந்தார்.
மறுநாள் காலை நான் கண்விழித்தபோது ஒரு தனி அறையில் லாரி அருகில் இருந்தேன். பிறகுதான் அவர் எனக்கு தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
நான் கண்விழித்தபோது இறந்துவிடுவேன் என்று நினைத்துப் பயந்தேன். லாரி, சிறுமிகளை சீரழித்த சாத்தான். என் மனதில் என்றும் மறக்க முடியாத ரணங்களை கொடுத்த சாத்தான் என்று கூறியுள்ளார்.
சாட்சி அளித்த 156 பெண்களில் 2000-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜேமியும் அடக்கம்.
இதையடுத்துப் பேசிய நீதிபதி ரோஸ்மரின், லாரி உன்னை தண்டிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
உனக்கு 175 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கிறேன். இனி நீ சிறைக்கு வெளியே வரக் கூடாது. நீ சிறைக்கு வெளியே வாழத் தகுதியற்றவன்.
நான் உன் மரணத்துக்கு கையெழுத்திடுகிறேன் என்று கூறி தீர்ப்பு நகலில் கையெழுத்திட்டார்.
லாரிக்கு எதிராகப் பெண்கள் சாட்சி கூறிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.