தமிழக அரசியலை உற்று கவனித்து வருவதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் ஓய்வு ஆகியவற்றின் காரணமாக தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ரஜினி மற்றும் கமல் ஆகியோர் தீவிர அரசியலில் களமிறங்குகின்றனர்.
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று பாஜக தான் என அக்கட்சி முழங்கி வருகிறது.
ஆனால் பாஜகவால் தமிழகத்தில் காலூன்றவே முடியாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ரஜினியை முன்னிறுத்தி மறைமுகமாக காலூன்ற பாஜக முயல்கிறது என திமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமித் ஷா, தமிழக அரசியல் களத்தையும் நிலவரத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
சரியான நேரத்தில் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்படும்.
தமிழகத்தில் இதுவரை திமுகவும் அதிமுகவுமே மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன.
வரும் 2019ம் ஆண்டு தேர்தலில் இந்த நிலை மாறும் என அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.