தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர உதவி புரிந்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது.
இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருத்தல் உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 07ம் திகதி நடைபெறும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் முதலாவது சாட்சியாளரை அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்கள் 08 பேரும் கடந்த நவம்பர் மாதம் 24ம் திகதி குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்ட 08 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்கவினால் ஒத்திவைக்கப்பட்டு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதன்படி இன்றைய தினம் அவர்கள் அபராதத் தொகையை செலுத்திய பின்னர் நிபந்தனையற்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.