வடக்கில் அரசாங்கத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் வேண்டாம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக நேற்றைய தினம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் முல்லைத்தீவில் மகாவலி ‘எல்’ வலய திட்டத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தற்போது தமிழர் தாயகப் பகுதியில் பரவலாகப் பேசப்பட்டு வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், அத்தகைய திட்டமேதும் அரசிடம் இருக்குமாயின், அரசு அதனைக் கைவிட வேண்டும் என ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல திட்டங்களில் மகாவலி குடியேற்ற பகுதிகளில் தமிழ், முஸ்லிம் மக்கள் குடியேற்றப்படாத நிலையே காணப்படுவதாக தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா
இதனால் மாகாவலி திட்டம் எனும்போது, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே தொடர்ந்தும் சந்தேகக் கண்ணோட்டமே காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் மணலாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்திலாவது தமக்கான காணிகள் கிடைக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தும், அதிலும் பாரிய ஏமாற்றமே அவர்களுக்கு கிடைத்தாக டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.