தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயதேவைகளுக்காக அரசாங்கத்திடமிருந்து நிதி எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தம்மைத் தவிர்ந்த ஏனைய 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திடமிருந்து தலா 2 கோடி ரூபா நிதியை பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடந்த வாரம் குற்றம் சுமத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே!
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குற்றச்சாட்டை ஒத்துக் கொண்டுள்ளதாகவும், அபிவிருத்தி என்ற பெயரில் நிதி பெறப்பட்டிருக்குமாயின் அதனை மேலும் அதிகரித்து வாங்கியிருக்க வேண்டும் என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கத்திடம் இருந்து தலா 2 கோடி ரூபா பணம் பெற்றுக்கொண்டதன் மூலம், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.