நாடாளுமன்றில் இதற்கு முன்னர் சமர்பிக்கப்பட்ட பல வரவுசெலவு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வாக்களித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த வரவு செலவு திட்டங்களுக்கு வாக்களிக்கும் போது சிவசக்தி ஆனந்தன் எவ்வளவு பணத்தை பெற்றுக்கொண்டார் என்பதை பொது மக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலா இரண்டு கோடி ரூபாய் வீதம் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே!!
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எம்.ஏ.சுமந்திரன், இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அத்துடன் 2010ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலும் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த இரண்டு வரவுசெலவு திட்டங்களுக்கும் சிவசக்தி ஆனந்தன் வாக்களித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், வரவுசெலவு திட்டங்களை லஞ்சம் பெற்றுக்கொண்டுதான் ஆதரிக்க வேண்டும் என்பது அவருடைய நிலைப்பாடாக இருந்தால், இதற்கு முன்னர் வாக்களித்த ஒவ்வொரு வேளையிலும் அவர் எவ்வளவு பணம் பெற்றுக்கொண்டார் என எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை தயவு செய்து அவர் மக்களுக்கு கூற வேண்டும் எனவும் அத்துடன் உளவு வேலை பார்ப்பதற்காக வவுனியாவில் அடுக்குமாடி வீடொன்று சிவசக்தி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இப்படியானவர் என்ன துணிச்சலோடு எங்கள் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும்?’என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.