அரசாங்கத்திடமிருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பழிபோடுபவர்கள், தமிழினத்தின் விடுதலைக்கோ தேசத்தை கட்டியெழுப்புவதற்கோ பொருத்தமற்றவர்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து உரையாற்றிய போதே மாவை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு மக்கள் தந்த ஆணைப்படி அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் தேசத்தையும் கட்டியெழுப்பவேண்டும் என்ற தீர்மானத்தின் பிரகாரமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அதற்கிணங்க அரசாங்கத்துடன் பலதடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதோடு, கூட்டமைப்பின் முயற்சியினாலேயே 65,000 பொருத்துவீட்டு திட்டத்திற்கு பதிலாக வடக்கு கிழக்கில் 50,000 கல் வீடுகள் கட்டப்பட்டு வருவதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட 90ஆயிரம் குடும்பங்களுக்கு தொழில் மற்றும் வாழ்வாதார உதவிகள் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது செயற்பாடுகளை ஒரு கொள்கையுடன் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்ட மாவை, தம்முடைய பிரதேசத்தின் நலனுக்காக ஒரு அறிக்கையைகூட முன்வைக்காதவர்களும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள மறுத்தவர்களுமே இன்று பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இவர்கள் அனைவரும்; அரசியல் உள்நோக்கம் கருதியே இவ்வாறு செயற்பட்டு வருவதாக மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.