முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளரான லலித் வீரதுங்க, வெளிநாடு செல்வதற்காக முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தேர்தல் கால மோசடி தொடர்பில் இவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இவரது கடவுச்சீட்டை நீதிமன்றம் முடக்கி வைத்துள்ளது.
எனினும், மருத்துவ தேவைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு லலித் வீரதுங்க தனது சட்டத்தரணி ஊடாக மனுத்தாக்கல் செய்திருந்தார்.
குறித்த கோரிக்கை மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிபதி குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் அணைக்குழுவின் 600 மில்லியன் ரூபாய் பௌத்த மத அனுட்டானங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு,
லலில் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோர் கடந்த வருடம் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், இவர்கள் இருவரும் பிணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், தண்டனை வழங்கப்பட்டு ஒரு வார காலத்திலேயே பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.