அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பிரித்தானிய விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரித்தானியாவின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கு, ட்ரம்ப்பின் எதிர்ப்புக் கூட்டணி தயாராகி வருவதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், சுமார் ஒரு மில்லியன் பேரை ஒன்றுதிரட்டி பிரித்தானியாவில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கு, ட்ரம்ப்பின் எதிர்ப்புக் கூட்டணியான பேஸ்புக் குழுமமொன்று தயாராகி வருவதாகவும், அந்த ஊடகங்கள் கூறியுள்ளன.
டாவோஸில் கடந்த வாரம் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயும் சந்தித்துக் கலந்துரையாடியபோது, இந்த வருட இறுதியில் பிரித்தானியாவுக்கு ட்ரம்ப் விஜயம் செய்வதற்கு இணக்கம் காணப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் பிரித்தானிய விஜயத்தின்போது, அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கப்படவுள்ளதுடன், பிரித்தானிய மகாராணி எலிஸபெத்தை அவர் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவரது விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ட்ரம்ப்பின் எதிர்ப்புக் கூட்டணியான பேஸ்புக் குழுமமொன்று, ‘எமது வரலாற்றில் மிகவும் நம்ப முடியாத எதிர்ப்பு’ எனக் கூறியுள்ளது.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக பேஸ்புக் குழுமத்தில் 80 ஆயிரம் பேர் இணைந்துள்ளதாகவும், அந்த ஊடகங்கள் கூறியுள்ளன.
இதேவேளை, இந்த வருட பெப்ரவரியில் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்து, லண்டனில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தை திறந்துவைப்பதாக இருந்தபோதும், அது ரத்தாகியது. இதன் பின்னர், ட்ரம்ப்புக்கும் தெரேசா மேக்குமிடையில் டாவோஸில் நடைபெற்ற சந்திப்பின்போது, பிரித்தானியாவுக்கு ட்ரம்ப் விஜயம் செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.