முல்லைத்தீவு, துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவு சங்கங்களுக்கு பல மில்லியன் ரூபா செலவில் அமைத்துக்கொடுக்கப்பட்ட அரிசி ஆலை திறக்கப்படாது மூடிய நிலையிலேயே காணப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு மீள்குடியேற்றத்தின் பின்னர் யு.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தினால் பல மில்லியன் ரூபா செலவில் குறித்த அரிசி ஆலை அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை குறித்த அரிசி ஆலை திறக்கப்படாத நிலையில் மூடிய நிலையில், பற்றைக்காடுகள் மண்டிய நிலையில் காணப்படுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரிசி ஆலையை இயக்குவதன் மூலம் பிரதேசத்தில் அறுவடை செய்கின்ற நெல்லை கொள்வனவு செய்து உரிய முறையில் சந்தைப்படுத்த முடியும் எனவும், இதனை இயங்க வைப்பதற்கு உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் குறிப்பிடுகையில்,
குறித்த அரிசியாலை யு.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தினால் அமைத்து வழங்கப்பட்டுள்ளது. அதனை இயக்குவதற்கு பாரிய நிதி தேவைப்படுகின்றது.
தற்போது பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் நட்டத்தில் இயங்கி வருவதனால் அரிசி ஆலையை இயக்குவதில் தாமதங்கள் காணப்படுகின்றன.
ஏதிர்காலத்தில் மாவட்டச் செயலகத்தின் ஊடாக நிதிகள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது, அவ்வாறு நிதி கிடைக்கும் பட்சத்தில் இதனை இயக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.