தமிழீழ தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றும் ‘பாதைகள் மாறலாம் ஆனால் பயணங்கள் மாறுவதில்லை’ என்ற வகையில் சரியான பாதையிலேயே செல்கின்றது என வவுனியா பிரதேச சபையின் வேட்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்றையதினம் (29.01.2018) நடைபெற்ற தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘தமிழ் பிரதேசங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை சூறையாடி தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்தவர்கள் இங்கு வந்து அபிவிருத்தி பற்றிப் பேசுவது வேடிக்கையாக இருக்கின்றது.
மீண்டும் இதனைச் சொல்லிக்கொண்டு தமிழர்களின் வாக்குகளை அபகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு தேர்தலில் தமிழ் மக்களைப் பயன்படுத்திவிட்டு மற்றைய சந்தர்ப்பங்களில் பாகுபாடு காட்டுபவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்கவேண்டும்.
தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றும் ‘பாதைகள் மாறலாம் ஆனால் பயணங்கள் மாறுவதில்லை’ என்ற வகையில் சரியான பாதையிலேயே செல்கின்றது. தொடர்ந்தும் அவ்வாறே பயணிக்கும். அந்த வகையில் தமிழ் தேசியத்தை உண்மையில் நேசிக்கும் ஒவ்வொருவரினதும் தெரிவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே தொடர்ந்தும் இருக்க வேண்டும்’ என்றார்.