சென்னையில் குறைகளை சொல்லி, குறி ஜோசியம் பார்க்க வருபவர்களுக்கு, வங்கிக் கடன் பெற்றுத் தந்து உதவி செய்வதாக கூறி, ஒரு கோடி ரூபாய் வரை ஏமாற்றிய குறி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தன்னை தேடி வரும் நபர்களிடம் குறைகளை தீர்ப்பதாக ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டு, மேலும் கடனாளியாக்கி குறி சொல்லும் சாமியார் ஹரிஹரன் இவர் தான்.
முகலிவாக்கத்தைச் சேர்ந்த குறிசொல்லும் சாமியாரான ஹரிஹரனை, தனது சொந்தப் பிரச்சனை தொடர்பாக, பெரியமேட்டில் தோல் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வரும் சீனிவாசன் அடிக்கடி சந்தித்து வருவார்.
தொழில் நட்டத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க, அவருக்கு தான் உதவுவதாக ஹரிஹரன் கூறியுள்ளார்.
தனக்கு தெரிந்த நபர்கள் மூலம், குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் பெற்று தருவதாகக் கூறி கொஞ்சம்கொஞ்சமாக சீனிவாசனிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார்.
சீனிவாசன் மூலம் பெரியமேட்டைச் சேர்ந்த மற்றொரு வியாபாரி முகமது பயாஸ் என்பவருக்கும் 50 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் பெற்று தருவதாக 2 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்று மோசடி செய்துள்ளார்.
இருவரும் கொடுத்த புகாரை அடுத்து குறி சொல்லும் சாமியர் ஹரிஹரனை பெரியமேடு போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் சாமியார் ஹரிஹரன் பல்வேறு நபர்களிடம் வங்கி கடன் பெற்று தருவதாக, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோசடி சாமியர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், ஏமாற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
மோசடி சாமியாரிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் கடந்த சில வருடங்களில் ஏராளமானோரை ஏமாற்றிருப்பதை கண்டுபிடித்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்