ஆன்லைன் மூலம் அழைப்பு விடுத்த கொல்கத்தா மாடல் அழகியை தனிமையில் சந்திப்பதற்காக சென்னை வடபழனியில் உள்ள ஜிஞ்சர் ஓட்டலுக்கு சென்ற மின்வாரிய அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வட பழனி நூறடி சாலையில் ஜிஞ்சர் என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான விருந்தினர்கள் தங்கி செல்கின்றனர்.
இந்த ஓட்டலில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தங்கி இருந்தார்.
அவர் தங்கி இருந்த அறையின் கதவு நள்ளிரவு திறந்து கிடந்தது.
ஓட்டல் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது அங்கு நிர்வாண நிலையில் 56 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் சடலமாக கிடந்தார்.
அறையில் தங்கி இருந்த கொல்கத்தா மாடல் அழகி அங்கு இல்லை.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வடபழனி காவல்துறையினர் அந்த நபர் கழட்டி வைத்திருந்த ஆடைகளை சோதித்தனர்.
இதில் அவர் அம்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமரேசன் என்பது தெரியவந்தது.
குமரேசன் எப்படி இறந்தார் ? மாடல் அழகி தங்கி இருந்த அறைக்கு குமரேசன் எதற்காக வந்தார் ?
அறையில் தங்கி இருந்த மாடல் அழகி எங்கு சென்றார் என விசாரணையை முடுக்கி விட்டது காவல்துறை.
ஓட்டலில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்த போது இரவு நேரத்தில் குமரேசன் ஜிஞ்சர் ஓட்டலுக்குள் வருவதும் அவர் மாடல் அழகியின் ஒப்புதலுடன் அவரது அறைக்குள் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
மேலும் அறையில் இருந்தபடி ஊழியர்களிடம் உணவுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து அந்த மாடல் அழகி மட்டும் அவசர அவசரமாக அறையில் இருந்து வெளியேறும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து மாடல் அழகியின் செல்போன் நம்பரை வைத்து அவர் எங்கு செல்கிறார் என்பதை கண்டறிந்த காவல்துறையினர் சென்னை விமான நிலையம் அருகில் அந்த மாடல் அழகியை சுர்றி வளைத்தனர்.
அவரை பிடித்து விசாரித்த போது குமரேசன் மரணத்தின் மர்மம் வெளிச்சத்துக்கு வந்தது.
கொல்கத்தா மாடல் அழகி , 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தன்னை தனிமையில் சந்திக்கலாம் என்று ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்ததாக கூறப்படுகின்றது.
இதனை பார்த்த மின்வாரிய செயற்பொறியாளர் குமரேசன் மாடல் அழகியுடன் தனிமையில் இருக்க ஆவல் கொண்டுள்ளார்.
இதையடுத்து அந்த மாடல் அழகியை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
இரவு சந்திக்க வருவதாக கூறி முன்பதிவு செய்த குமரேசன், வீட்டில் தனது மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு வெளியில் செல்வதாக கூறி விட்டு வட பழனியில் அந்த மாடல் அழகி தங்கி இருந்த ஜிஞ்சர் ஓட்டலுக்கு சென்றுள்ளார்.
ஆண்மையூக்கி மாத்திரைகளை உட்கொண்ட குமரேசன், மாடல் அழகியுடன் தனிமையை கழிக்க தொடங்கி உள்ளார்.
அப்போது அவருக்கு திடீரென்று மூச்சுதினறல் ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்தில் படுக்கையிலேயே குமரேசன் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த மாடல் அழகி தனது உடமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு சொல்லாமல், கொள்ளாமல் அறையில் இருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது.
குமரேசனின் உடல் பிணக்கூறாய்வுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
வயோதிகர்கள், ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் இத்தகைய மாத்திரைகளை உட்கொண்டால் அது உடலில் ரத்த அழுத்தத்தை அதிகரித்து மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்..!