தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் இன்னும் மஹிந்தவின் கையாளாகத்தான் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாகரை பிரதேச சபைக்கு கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரி.ராயுதனன் என்பவரின் அலுவலகம் மாங்கோணி பாம்கொலணியில் நேற்று மாலை திறந்து
வைத்து உரையாற்றிய போதே சீனித்தம்பி யோகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
இங்குள்ள அரச அதிகாரிகள் ஒரு சிலர் தங்களது அதிகரங்களை பயன்படுத்தி தமிழ் இனம் சாராதவர்களுக்கு காணிகளை வழங்கியுள்ளதாகவும் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் மக்கள் படகுச் சின்னத்தினை நிராகரித்து வருவதாக தெரிவித்த சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆனால் சிலர் அதனை நம்பி வாழ்வதாகவும் படகுக்கு அளிக்கும் வாக்குகள் அநீதிக்கு அளிக்கும் வாக்குகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் வீடு வீடாக பிள்ளைகளை அடித்து பறித்தவர்கள் யார்? தம்பி பிள்ளையானும், முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் தான். இதற்கு பிரபாகரனா உத்தரவிட்டார் என சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைவர் பிரபாகரன் தலைமையில் இந்த உத்தரவு இடம்பெற்றிருந்தால் வடக்கு மாகாணத்திலும் பிள்ளைகளை பிடித்திருக்க வேண்டுமே எனவும் சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தான் அதிகாரம் மிக்கவர் என்று காட்டுவதற்கும், எமக்கு பெரும் படை வேண்டும் என்று காட்டுவதற்கும் பிள்ளையான், கருணா இணைந்து பிள்ளைகளை கொண்டு சென்றார்கள் என தெரிவித்த சீனித்தம்பி யோகேஸ்வரன்
இவ்வாறு தராத பெற்றோர்களுக்கு அடித்தார்கள் எனவும் இன்று இவர்களால் கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்தவர்கள் மக்களின் அழிவுக்கு காரணமானவர்களே இன்று மட்டக்களப்பான் என்றால் காட்டிக் கொடுப்பவன் என்ற பெயரை வாங்கித் தந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா என்று சற்று சிந்தியுங்கள் என யோகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.