பதுளை அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிராகவும், அதற்கு காரணமான ஊவா மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்குமாறும் வலியுறுத்தி பொது மக்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் மல்லியப்பு சுற்றுவட்டத்திற்கு முன்பாக இன்றைய தினம் மதியம் 12.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்களும் இணைந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாதைகளை ஏந்தி, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தின் போது மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், உதயகுமார், ஆர்.இராஜாராம், சரஸ்வதி சிவகுரு என பலரும் பொது மக்களுடன் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, ஹட்டன் பொலிஸாரால் வீதியை மறித்து போராட்டத்தை நடத்துவதற்கும், ஊர்வலம் செய்வதற்கும் எதிர்த்து ஹட்டன் நீதிமன்றத்தின் ஊடாக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.