ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபர் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று மீண்டும் விசாரணையை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், பதுளை காவல்துறை தலைமையக பரிசோதகர் ஈ.எம்.ரி.பீ.வி.தென்னகோனும் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என ஊவா மாகாண முதலமைச்சர் விடுத்திருந்த அறிவுறுத்தலை மனித உரிமைகள் ஆணைக்குழு நிராகரித்திருந்தது.
அத்துடன், அவருக்கு பிரிதொரு தினத்தை வழங்க முடியாது என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.
நியாயமான காரணங்களின்றி ஆணைக்குழுவின் உத்தரவை புறக்கணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவுக்கு, ஆணைக்குழு எழுத்துமூலம் அறிவித்திருந்தது.
எவ்வாறிருப்பினும், முதலமைச்சர் இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாவது நிச்சயமற்றது என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.