கனடாவில் அமைந்திருந்த Nanaimo Indian Hospital என்னும் மருத்துவமனையின் கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் கனடாவின் ஃபெடரல் அரசாங்கத்தால் இந்திய மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன.
1946 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Nanaimo Indian Hospital 1967ஆம் ஆண்டு மூடப்பட்டது.
இம்மருத்துவமனை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன, கடந்த 2002 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் தருவாயில் இருக்கும் Barbara Hunt தனது மகளிடம் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், 1940களில் Nanaimo Indian Hospitalயில் காசநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட Barbara, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது அவரது இடுப்புக்கு கீழே செயல்படவில்லை.
காச நோய் சிகிச்சையின் காரணமாக அவரது முதுகுத்தண்டு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
பல வருடங்களுக்குப் பிறகு வேறொரு மருத்துவரை அவர் சந்தித்தபோது தனக்கு காசநோய் இருந்ததாகக் கூறியுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவரோ நிச்சயம் அவருக்கு காச நோய் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவ்வாறு இருந்திருந்தால், அவரது நுரையீரலில் தழும்புகள் இருப்பது எக்ஸ்-ரேயில் தெரிந்திருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
இதேபோல் பாதிக்கப்பட்ட இன்னொருவர் Sharon Whonnock. இவரும் காச நோய் என்று கூறி கிட்டத்தட்ட 10 வருடங்கள் படுக்கையில் கட்டி வைக்கப்பட்டிருக்கிறார். சாப்பிடும்போது மட்டுமே கட்டுக்கள் அவிழ்க்கப்படும். சிறுநீர் கழிக்க வேண்டுமென்றாலும் bedpanஇல் தான் கழிக்கவேண்டும்.
சின்னம்மை நோய் பாதித்திருந்தபோது கூட தான் ஒரு நர்ஸால் அடித்து துன்புறுத்தப்பட்டதையும் அருவருப்பான காரியங்களை செய்ய வற்புறுத்தப்பட்டதையும் அவர் நினைவு கூறுகிறார்.
பல வருடங்களாக கால்கள் கட்டியே வைக்கப்பட்டிருந்ததால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபிறகும்கூட அவரால் நடக்கமுடியவில்லை.
அவர் மீது மருத்துவப் பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டதாக அவர் உறுதியாக நம்புகிறார். ஆனால் அவரிடம் அதை நிரூபிக்க ஆதாரங்கள் எதுவும் இல்லை.
“நான் ஒரு ஆய்வுக்கூட எலியைப்போல் பயன்படுத்தப்பட்டேன் என்று எண்ணுகிறேன். அதனால்தான் அதற்குப்பிறகு என் வாழ்க்கை முழுவதுமே எனக்குப் பிரச்சினைகள் இருந்தன” என்கிறார் அவர்.
எல்லாவற்றிலும் கொடுமையான விடயம் அவர் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டார். அதனால் இன்றும் பயந்து இரவில் தன்னுடைய அறையின் விளக்குகளை அணைக்காமலேதான் தூங்குகிறார்.
வழக்கமாக ஒரு நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் குறித்து அவருக்குத் தெரிவித்து ஒரு ஒப்புகைப் படிவத்தில் அவரிடமிருந்து கையொப்பம் பெற்றிருக்கவேண்டும். ஆனால் இந்த மருத்துவமனையில் அந்த விடயம் பின்பற்றப்படவில்லை.
இப்போது ஃபெடரல் அரசாங்கம் மேற்கொண்ட சோதனைகளுக்கு எதிராக பெரிய வழக்கு ஒன்று தொடுக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ள அவ்வழக்கு தொடர்பான வழக்கறிஞர் ஒருவர் ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும், அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10,000 பேரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
பல பாலியல் துன்புறுத்தல்கள், உடல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் சரியான உணவு வழங்கப்படாமை குறித்த பல விவரங்கள் கிடைத்துள்ளன.
மனிதர்கள் மீது மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறோம். இந்த விடயம் கற்பனைக்கெட்டாததாகவும் புரிந்து கொள்வதற்கு கடிமானதாகவும் உள்ளது என்கிறார் அவர்.