முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க இன்று (04.01.2018) காலை சர்வதேச பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா சென்றுகொண்டிருந்த உதயங்க வீரதுங்கவை, துபாய் விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்த சர்வதேச பொலிஸார் அவரை துபாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து, உதயங்கவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று துபாய் சென்றுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் மிக் ரக விமானத்தை கொள்வனவு செய்தபோது, பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாக உதயங்க மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் நிதிக்குற்ற தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், விசாரணைகளுக்கு சமூகமளிப்பதற்கு உதயங்க தவறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டார்.
கடந்த மூன்று வருட காலமாக இலங்கை அரசாங்கம் அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்து வந்த போதும், அதனை நிராகரித்த உதயங்க வீரதுங்க தமது ராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
கடந்த ஆட்சியாளர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட போது, உதயங்கவையும் சந்தித்தமைக்கான புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.