இலங்கையுடன் உயர்மட்ட உறவுகளை பேணிக்கொள்ள விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்திய பிரதமர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘எமது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள், வரலாறு, கலாச்சார அடிப்படையில், உண்மையான பன்மைத்துவத்துடன் வளர்ந்து வந்திருக்கின்றது. இந்தப் பிணைப்புக்களை மேலும் வலுப்படுத்திக் கொள்வது எமது பொறுப்பும், எதிர்பார்ப்பும் ஆகும்.
எமது நாடுகளில் உள்ள மக்களின் பரஸ்பர நன்மைக்காக, உயர் மட்டங்களில், குறிப்பாக பொருளாதாரத்துறையில், நமது உறவை அதிகரித்துக் கொள்வதற்கு தொடர்ந்து உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கிறேன். தயவுசெய்து எனது கருத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.
உங்களின் நல்ல ஆரோக்கியம், தனிப்பட்ட நல்வாழ்வு மற்றும் நட்புடைய இலங்கை மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு எனது வாழ்த்துக்கள்’ என்றும் அவர் அந்த வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.