நாட்டில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடி, திருட்டு, வீண்விரயம் மற்றும் கொலை அச்சுறுத்தல்களுக்கு எதிராக உண்மையாகவும் சரியாகவும் நேருக்கு நேராக தம்முடன் கலந்துரையாடலில் ஈடுபட வருமாறு பிரதான அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்றையதினம் (04) பிற்பகல் பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இம்முறை தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டியது திருடர்களை பாதுகாக்கும் கட்சியையா அல்லது திருடர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கக்கூடிய கட்சியையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்பதற்கான காரணம் தம்மை தனிப்பட்ட ரீதியில் பலப்படுத்திக்கொள்ளவல்ல என தெரிவித்த ஜனாதிபதி ஊழல், மோசடி, திருட்டு மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான தனது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பலப்படுத்துவதற்காகவே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் நாட்டில் தூய்மையான ஆட்சியை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை மிக வினைத்திறனான முறையில் செய்து முடிக்க முடியுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.