தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் புலிகளின் நடமாட்டத்தை துல்லியமாகப் படம் பிடிக்க 200 தானியங்கி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய இரு மாவட்ட வன எல்லைக்கு உட்பட்ட 925 சதுர கிலோ மீற்றரில் அமைந்துள்ளது தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம்.
அங்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுக்கப்படுகின்றன.
அதற்காக தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் 59 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு புலிகளின் எச்சம், கால்தடம், மரங்களில் புலிகளின் நகக்கீறல்கள், உதிர்ந்த முடி,
வேட்டையாடுதலின் போது புலிகளுக்கு ஏற்பட்ட காயங்களால் வழிந்த குருதி, மாமிசம் ஆகியன சேகரிக்கப்படும்.
அவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் 200 தானியங்கி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அவற்றில் பதிவாகும் புலியின் ஒளிப்படங்களில் காணப்படும் வரிகள் மூலம் ஒவ்வொரு புலியும் தனித்தனியே கணக்கில் சேர்க்கப்படவுள்ளன.