தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மட்டுமே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையில், கல்லடி, உப்போடையில் நேற்று (05.02.2018) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே வியாழேந்திரன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிலர் சில அபிவிருத்திகளை செய்துவிட்டு அதனை மட்டும் வைத்து தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு கேட்டுவருவதாக குறிப்பிட்ட வியாழேந்திரன், தாங்கள் அபிவிருத்தியை பற்றி பேசுவதில்லை எனவும் தாங்கள் அபிவிருத்தியை அனுபவிக்க வேண்டுமானால் நிலம் சார்ந்த இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இன்று அனைத்து கட்சிகளும் ஒரு பக்கம் நின்று ஒட்டுமொத்த விசமத்தனமான விமர்சனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது சொரியும் நிலையிருந்து வருவதாகவும் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யார் என்ன சொன்னாலும் பிள்ளையை சுமந்தவள்தான் பிள்ளையை பெறவேண்டும் என தெரிவித்த வியாழேந்திரன், தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தாங்கள் செல்லும்போது மிகவும் இராஜதந்திரமாக மிகவும் கவனமாக எந்த குழப்பத்தினையும் ஏற்படுத்தாது இந்த இணைப்பு அரசாங்கத்தில் மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பயணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவர்; என்ன கூறினாலும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மாத்திரமே தமிழ் மக்களுக்கான தீர்வினைப்பெற்றுக் கொடுக்க முடியும் என வியாழேந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.