வடக்கு மற்றும் கிழக்கில் காணாமற்போனோர் எங்குமே இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்திற்கு, காணாமல் போனோரின் உறவுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உறவுகளுக்காக ஏங்கித் தவிக்கும் தமக்கு இவ்வார்த்தைகள் மேலும் வேதனையை ஏற்படுத்துகின்றதென குறிப்பிட்டுள்ள உறவினர்கள், தமது வேதனையை கண்ணீராக வெளிப்படுத்தியுள்ளனர்.
இறுதி கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த மற்றும் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டுமென வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே!!
இந்நிலையில், நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமற்போனோர் எங்குமே இல்லையென்ற கருத்தை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பாக, வவுனியாவில் கடந்த ஒரு வருட காலமாக சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமற்போனோரின் உறவினர்கள் இன்று (06.02.2018) காலை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தனர்.
இதில் கருத்துத் தெரிவித்த போதே உறவினர்கள் தமது வேதனையை இவ்வாறு கண்ணீரால் வெளிப்படுத்தினர்.
அத்துடன் காணாமற்போனோருக்கு நஷ்டஈடு வழங்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கும் கண்டனம் வெளியிட்டதுடன் அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகைக்காக போராட்டம் நடத்தவில்லையென உறவினர்கள் தெரிவித்துள்ளளர்.
காணாமற்போன தமது பிள்ளைகள் ஜனாதிபதியின் தேர்தல் பிரசார சுவரொட்டியில் காணப்படும் ஒளிப்பட ஆதாரம் தம்மிடம் இருப்பதாக தெரிவித்த உறவினர்கள் இதற்கு ஜனாதிபதி பதில் கூறியே ஆகவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் தாம் நம்பிக்கையற்றுப் போயுள்ளதாக குறிப்பிட்டுள்ள காணாமற்போனோரின் உறவினர்கள், சர்வதேசம் தலையிட்டு இவ்விடயம் தொடர்பாக உடன் தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.