தமிழர்களின் இருப்பை உறுதி செய்ய கூடிய நிலையில் மக்களின் வாக்குகள் அமைய வேண்டும் என வடக்கு மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழர்களின் வகிபாகமானது ஆட்சி-அதிகாரங்களை நோக்கியதாக அமைந்துவிடவில்லை. அந்தவகையில் எமது இனத்தின் எதிர்கால இருப்பை உறுதிசெய்யும் வகையில் எங்கள் வாக்குகள் அமைய வேண்டும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழர்களின் விடுதலைப்போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் பலமானது தமிழினத்தின் விடுதலை என்ற உயரிய இலட்சியத்தின் அடிப்படையில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டிருந்தது.
அக்காலகட்டங்களில் நாம் எதுவித குழப்பமும் இன்றி தீர்க்கமாக முடிவெடுக்கும் வகையில் வழிகாட்டும் உன்னதத் தலைமையின் பிரசன்னம் இருந்திருந்தது.
அவ்வழி நின்று இதுவரை காலமும் எம்மால் தெரிவு செய்யப்பட்டிருந்த தலைமைகள் ஆயுத மௌனிப்பின் பின்னர் பல்வேறு அணிகளாக பிளவுபட்டு நின்று வாக்குக்கேட்கும் அவலம் இன்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையானது மக்களாகிய உங்கள் முன் பாரிய குழப்பத்தினையும் அதிருப்தியினையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த குழப்பத்திற்குள் ஆட்பட்டு வாக்களிக்க செல்லாது வீட்டுக்குள்ளேயே இருந்துவிடுவோமாயின் இவ் அவலநிலை மேலும் வலுப்பெற்று எமது எதிர்கால இருப்பையே இல்லாது செய்துவிடும்.
ஆகவே, எமக்கு கிடைத்திருக்கும் ஜனநாய உரித்தை பயன்படுத்துவது இன்றியமையாதது ஆகும். அடிப்படையில் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது கிராமிய அளவிலான அபிவிருத்தியை மேற்கொள்ளும் கட்டமைப்பினை தீர்மானிக்கும் தேர்தலாக அமைந்துள்ளது.
கிராமிய அபிவிருத்தி சரியான முறையில் மேற்கொள்ளப்படும் போதுதான் உண்மையான சமூக அபிவிருத்தி, முன்னேற்றம் என்பன சாத்தியமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.