காத்தான்குடி நகர சபைத் தேர்தலில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் மேலதிகப் பட்டியல் வேட்பாளரான ஏ.எம்.முகம்மட் பர்சஸாத் என்பவரின் வீட்டின் மீது, இன்று (06) அதிகாலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதிய காத்தான்குடி, தக்வா நகரத்திலுள்ள வேட்பாளரின் வீட்டின் நுழை வாயில் கதவு உடைந்து சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் முன் பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது, வேட்பாளர் உட்பட அவரது மனைவி, பிள்ளைகள் வீட்டில் இருந்ததாகத் தெரியவருகின்றது.
அத்துடன் சம்பவம் தொடர்பில், காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், பொலிஸ் தடவியல் அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.