திருமணம் எப்போது என்று அடிக்கடி விசாரித்த வந்த பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
இந்தத் திகில் சம்பவம் இந்தோனேசியாவின் கம்பங் பாசிர் ஜோங் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பாயிஸ் நூர்தின் (வயது 28) என்பவருக்குத் திருமணம் ஆகவில்லை.
பக்கத்து வீட்டில் வசித்த திருமணமான பெண் ஆயிஷா (32), அடிக்கடி அவருடன் பேசுவார்.
அப்போது ‘நீ ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை? எப்போது திருமணம்? உன் வயது இளைஞர்களுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது.
நீயும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்’ என்று அறிவுரை கூறியுள்ளார்.
இவ்வாறு பலமுறை கூறி வெறுப் பேற்றியதால் பாயிசுக்கு அவமானமாகப் போய் விட்டது.
இது அந்தப் பெண் மீது ஆத்திரத்தை ஏற்படுத்த, அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரைக் கொலை செய்துள்ளார்.
ஆயிஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்த பாயிஸ், அங்கிருந்த அலைபேசி மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு ஜகார்த்தாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். பொலிஸார் அவரைச் சுற்றி வளைத்த போது தப்பிக்க முயன்றுள்ளார்.
காலில் துப்பாக்கியால் சுட்டு அவரைப் பொலிஸார் கைது செய்தனர்.
அவர் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.