பாராளுமன்றத் தேர்தலுக்கு இப்போதிருந்தே தயாராகுமாறு கொங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார்.
பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் இன்று கொங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தாம் புதிய தலைவரை பெற்றிருக்கிறோம். தலைவர் பதவியில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என உங்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக சோனியா காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிவிட்டதாக தெரிவித்த சோனியா காந்தி இந்த ஆட்சியில் நீதித்துறை, ஊடக மற்றும் சிவில் சமூகம் என அனைத்தும் திட்டமிட்ட தாக்குதலுக்கு உட்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் குஜராத் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் தமக்கு உத்வேகத்தை அளித்துள்ளன. இது மாற்றத்திற்கான நேரம் வருவதை காட்டுகிறது. இதேபோல், கொங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கு எடுத்துக்காட்டாக கர்நாடக தேர்தலையும் எதிர்பார்க்கிறேன்.
நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம். எனவே, எம்.பி.க்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் பாஜ.க.வை தோற்கடிக்க கட்சியின் தலைவர் ராகுலுடன் இணைந்து செயல் படுவதாகவும் சோனியா காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.