சிரிய தலைநகர் டமாஸ்கஸூக்கு அருகில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்கு கௌடா (Ghouta) பகுதியில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் 12 சிறுவர்கள் உட்பட 31 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள புறநகர் பகுதிகளான டியுமா (Douma), பெய்ட் சவா (Beit Sawa) உள்ளிட்ட பகுதிகளில் சிரிய அரசாங்கப் படைகள் நேற்று (புதன்கிழமை) நடத்திய விமானத் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் மேற்படி பொதுமக்கள் உயிரிழந்ததாக சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை குண்டுத்தாக்குதல்களில் 65 பேர் காயமடைந்துள்ளதாக பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் கண்காணிப்புக்குழு அறிவித்துள்ளது.
எனினும் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரிய அரசாங்கம் கூறியுள்ளது.
இவ்வாறிருக்க டியுமாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதல்களை தொடர்ந்து காயமடைந்த சிறுவர்கள் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்படும் காணொளி சிரிய குழு ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளது.