நன்னடத்தை அடிப்படையில் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை விடுதலை செய்யலாம் என தமிழக அரசுக்கு சிறைத் துறையினர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்லொழுக்கம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படவுள்ளதாக தமிழக அரசின் சுற்றறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
எனவே, இதற்கான பட்டியலைத் தயாரித்து எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பற்றிய கணக்கெடுப்பு பணிகளை சிறைத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கான பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறைகளில் 26 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.