பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ள ரோஹிங்கியா அகதிகள், தமது சொந்த இடங்களுக்குப் பாதுகாப்பாகத் திரும்பிச் செல்வது தொடர்பாக கவனஞ்செலுத்தப்பட வேண்டுமென, பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் வலியுறுத்தியுள்ளார்.
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்துள்ள பொரிஸ் ஜோன்ஸன், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் கஸினா மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அப்துல் ஹஸன் மஹ்மூட் அலி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே, அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ள ரோஹிங்கியா அகதிகள் தமது சொந்த இடங்களுக்குப் பாதுகாப்பாகத் திரும்பிச்செல்ல வேண்டும். இந்நிலையில், அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கப்பட வேண்டும்’ என்றார்.
மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதியிலிருந்து நிலவிய வன்முறை காரணமாக, சுமார் 6 லட்சத்து 88 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.