நாட்டில் புதிய தேர்தல் முறையை அமுல்படுத்தியதை எண்ணி தான் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று தனது வாக்கினை பதிவு செய்த பின்னர்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மிக நீண்ட காலத்திற்கு பின்னர் இன்று ஒரே நாளில் தேர்தல் நடைபெறுகின்றமையானது மகிழ்ச்சியளிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நாற்பத்தொன்பது ஆண்டுகளுக்கு பின்னர் தொகுதிவாரியான தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு, விகிதாசார முறையிலான கலப்பு முறையிலான தேர்தல் இம்முறை நடைபெறுவதாக தெரிவித்த ஜனாதிபதி
இதன்மூலம் வன்முறைகள் குறைக்கப்பட்டு, மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த உள்ளூராட்சி சபை தேர்தலானது சுதந்திரமாகவும், மகிழ்ச்சியுடனும், அச்சமின்றி, யாருடைய தலையீடுமின்றி வாக்களிப்பதற்கு மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர், அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி
மக்களின் மும்முரமான வாக்களிப்பின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.