இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 215 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி, 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
கடந்த 8ஆம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய இலங்கை அணி, பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 222 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக குசல் மெண்டிஸ் 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அப்துர் ரஸ்ஸாக் மற்றும் தைஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸில் 110 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக மெஹூடி ஹசன் 38 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் சுரங்க லக்மால், அகில தனஞ்சய ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்படி முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 112 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது. இந்த ஓட்ட எண்ணிக்கையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸிற்காக 226 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக ரோசன் சில்வா ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் தைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, 339 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 123 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இலங்கை அணி 215 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில், மொமிநுல் ஹக் 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் அகில தனஞ்சய 5 விக்கெட்டுகளையும், ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் ரோசன் சில்வா தெரிவுசெய்யப்பட்டார்.