நாட்டில் ஊழல், மோசடி மற்றும் முறைக்கேடுகளை இல்லாதொழிக்கும் தேசிய செயற்திட்டம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்றையநாள் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேர்மையான அரசியலுக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குறுதியைப் பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல சகல பிரதிநிதிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்ட அனுபவங்களைக் கொண்டு குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்து சரியான பாதையில் பலமான அரசியல் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்க சகலரும் ஒன்றுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மற்றும் வெற்றியீட்டாத அனைத்து வேட்பாளர்களையும் ஒன்றிணைத்து, கட்சி மற்றும் அரசாங்கத்தின் சார்பில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கான செயற்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.