இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார பெற்றிபெற்று 2 – 0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இப்போட்டி பங்களாதேஷின் ஷில்கெட் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பாக குஷல் மென்டிஸ் 70 ஓட்டங்களையும், குணதிலக 42 ஓட்டங்களையும், பெரேரா 31 ஓட்டங்களையும் மற்றும் ஷானக 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் அபு ஜெயட், ரஹ்மான், ஷைப்டின் மற்றும் ஷர்கர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
211 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. பங்களாதேஷ் அணி சார்பில் முஹம்மடுல்லா 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் ஷெஹான் மதுஷங்க மற்றும் துஷங்க குணதிலக ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அகில தனநாயக, தஷூன் ஷனக, அமில அபொன்ஷோ, ஜீவன் மென்டிஸ் மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக குஷல் மென்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.