இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டியில் இந்திய அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து 3 ரி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதன் முதலாவது போட்டி வொண்டெரர்ஸ் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணி சார்பாக தவான் 72 ஓட்டங்களையும், பாண்டே 29 ஓட்டங்களையும் மற்றும் கோஹ்லி 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் டாலா 2 விக்கெட்டுகளையும், மொரிஷ், ஷம்சி மற்றும் பிஹ்லுக்வயோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
204 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 28 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
தென்னாபிரிக்கா சார்பில் கென்ரிக்ஸ் 70 ஓட்டங்களையும், பெஹார்டீன் 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதொடு உனத்கட், பாண்டியா மற்றும் ஷாகல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமார் தெரிவுசெய்யப்பட்டார்.