தற்போது ஈரானில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, விமான விபத்து இடம்பெற்ற இடத்துக்கு மீட்புப் பணியாளர்கள் செல்லமுடியாத நிலைமை காணப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெஹ்ரானிலுள்ள மெஹ்ராபாட் விமான நிலையத்திலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 66 பேருடன் புறப்பட்ட உள்ளூர் விமானமொன்று, இஸ்ஃபஹான் மாகாணத்துக்கு அருகில், தெஹ்ரானுக்கும் தென்மேற்கு யசூஜ் நகருக்குமிடையிலான ஸகுரோஸ் மலைப்பாங்கான பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், மீட்புப்பணி நடவடிக்கைக்காக 100க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டபோதும்,
விபத்து இடம்பெற்ற இடத்தில் மூடுபனியுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவுவதால் அவர்களினால் விபத்து இடம்பெற்ற இடத்தை இன்னும் அடைய முடியவில்லையெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஏய்ஸ்மன் விமான சேவையினரினால் இயக்கப்படும் ஏ.ரி.ஆர். 72-500 எனும் இலக்கமுடைய விமானம், விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சுமார் 50 நிமிடங்களில் ரேடார் கண்காணிப்பிலிருந்து மறைந்துள்ள நிலையில், விபத்துக்குள்ளானதாகவும்,
விபத்து இடம்பெற்ற வேளையில், விமானத்தில் 60 பயணிகளும் 4 விமானப் பணியாளர்களும், இரண்டு விமானிகளும் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.