காணாமல் போன தமது உறவுகளை மீளக் கையளிக்குமாறும் அவர்களைப் பற்றிய உண்மை நிலையை வெளிப்படுத்துமாறும் கோரி, கிளிநொச்சியில் மாபெரும் அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக தற்போது அமைதியான முறையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்றுடன் ஒரு வருடத்தை எட்டியுள்ளது. அதனை நினைவுறுத்தும் வகையில் இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்கள், ‘சர்வதேசமே, உள்நாட்டு பொறிமுறையில் எமக்கு நம்பிக்கை இல்லை’, காணாமல் போனோர் அலுவலகம் சர்வதேசத்திற்கு கண்துடைப்பு’, ‘குற்றங்களை மறைக்க சட்டங்களில் திருத்தமா?’, ‘சர்வதேசமே ரகசிய முகாம்களில் உள்ள எமது உறவுகளைத் தா’, ஐ.நா.வே! பன்னாட்டு தலையீட்டுடனான விசாரணை பொறிமுறையே தேவை’, ஐ.நா.வே! எங்கள் பிள்ளைகளுடன் நாங்கள் வாழும் உரிமையை எங்களுக்கு உறுதிசெய்’ போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளுடன் தமது உணர்வுகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் பாஸ்கரா மற்றும் சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.